சனி, 4 ஏப்ரல், 2009

இந்து மதத்திற்கு மாறும் தலித் கிறிஸ்தவர்களுக்கு `எஸ்.சி.' அந்தஸ்து தமிழக அரசு



இந்து மதத்திற்கு மாறும் தலித் கிறிஸ்தவர்களுக்கு `எஸ்.சி.' அந்தஸ்து
தமிழக அரசு புதிய உத்தரவு


சென்னை, ஏப்.4-

இந்து மதத்திற்கு மாறும் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இடஒதுக்கீட்டு சலுகை

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பி.சி. வகுப்பினருக்கு 30 சதவீதமும் (முஸ்லிம்களுக்கான 31/2 சதவீதம் சேர்த்து), எம்.பி.சி. வகுப்பினருக்கு 20 சதவீதமும், எஸ்.சி. வகுப்பினருக்கு 18 சதவீதமும் (அருந்ததியருக்கான 3 சதவீதம் சேர்த்து), எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொதுப்போட்டிக்கு 31 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

எஸ்.சி. வகுப்பினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பி.சி. பிரிவினர் கீழ் வந்துவிடுவார்கள். எனவே, எஸ்.சி. வகுப்பினருக்கான எந்தவித சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்காது. அதேநேரத்தில் இந்து மதத்தைச்சேர்ந்த ஆதிதிராவிடர்கள், புத்த மதத்திற்கோ அல்லது சீக்கிய மதத்திற்கோ மாறினால் தொடர்ந்து அவர்கள் எஸ்.சி. பட்டியலிலே நீடிப்பார்கள். எஸ்.சி. வகுப்பினருக்கான அனைத்து சலுகைகளையும் பெற முடியும்.

மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து

புத்த மதம் அல்லது சீக்கிய மதத்திற்கு மாறுவோரைப்போல கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்குகளும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.

அதேநேரத்தில், மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் அமைப்புகள் மற்றொருபுறம் வலியுறுத்தி வருகின்றன இத்தகைய மாறுபட்ட சூழ்நிலையில், இந்து மதத்திற்கு திரும்பும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு உத்தரவு

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தலித் கிறிஸ்தவர்களின் குழந்தைகள் இந்துமதத்திற்கோ, புத்தமதத்திற்கோ, அல்லது சீக்கிய மதத்திற்கோ மதம் மாறினால் அவர்கள் எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தினத்தந்தி, 04.04.2009

கருத்துகள் இல்லை: