ஞாயிறு, 18 ஜனவரி, 2009

வம்சவதம்... தமிழ் நவீன நாடகம் நெல்லையில்

மூன்றாம் அரங்கு வழங்கும்

வம்சவதம்

தமிழ் நவீன நாடகம்


இடம் : ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி - சந்திப்பு

நாள் : 25.01.2009 ஞாயிறு, மாலை 6.00 மணி


வம்சவதம் இந்நாடகம் ஈழத்தமிழருக்கான எமது சமர்ப்பணம். ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் தொடுத்துக் கொண்டிருக்கும் இனவெறிப் படுகொலைகள் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணமிது. வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து, உள்நாட்டிலேயே அகதிகளாய் வெட்ட வெளிகளில் அநாதரவாய் அலைந்து, வனாந்தரங்களில் பாம்புக் கடிபட்டே இறக்கும் அவல நிலையில் நம் சகோதரர், எம் தமிழினம் படும் இன்னல்களைச் செவிமடுத்துக் கொண்டே எத்தனை நாட்கள் வாளாயிருப்பது எனும் ஆதங்கத்தில், மன உளைச்சலில் விளைந்த நாடகம் இது.


சிங்கள இராணுவம் தொடுத்த பெரும் படுகொலைகளுக்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே தமிழ் மக்கள் மீது சாதாரண சிங்கள மக்களும் ஏன் இத்துணை இனவெறி கொண்டார்கள்? கடந்த 50 ஆண்டுகளில் நடந்த எண்ணற்ற படுகொலைகளில் சாதாரண சிங்கள மக்களும் வீதிகளில் தடியெடுத்து ஏன் திரிந்தார்கள்? பொழுது விடியும் முன்னே, இருளின் தயவில் வயல்களில் புகுந்து பயிர்களை எரித்து பதறியடித்து விழித்தோடிய அப்பாவித் தமிழ் மக்களின் தலைகளைச் சாதாரண சிங்களர் ஏன் வெறிகொண்டு கொய்தார்கள் என்ற கேள்விகளுக்கான பதிலை துழாவிக் கொண்டிருக்கையில் கிட்டிய சில தெளிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் இது.


சிங்கள வெகுமக்களிடையே இனவெறி இத்துணை ஆழமாக ஊன்றியிருப்பதன் காரணம். கடந்த நூற்றாண்டின் இறுதியில் சிங்கள இனவெறியர் மீள்கண்டுபிடிப்பு செய்து தமது இனத்தவரின் மாபெரும் சாதனையாக, பெருமைமிகு பொக்கிஷமாக, தமது வரலாற்றுப் பாரம்பரியமாக முன்வைத்த ''மகா வம்சம்'' என்ற பௌத்த காவியத்தில் உள்ளுறைந்திருக்கிறது. சிங்களவரின் புகழ்பாடும் அக்காவியத்தை வாசிக்க நேரும் எந்த ஒரு தமிழருக்கம் சொல்லவொண்ணா அதிர்ச்சி உருவாவது நிச்சயம்.


புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகச் சொல்லும் அக்காவியம், எல்லையற்ற கருணையின் வடிவான புத்த பெருமானே அத்தீவில் இருந்த யட்சர்களை நெருப்பு மழை பொழிய வைத்தும், புயலை வரவழைத்தும் அடிபணியவைத்ததாகச் சித்தரிக்கிறது.

சிங்கள அரசை நிலைகொள்ளச் செய்த துட்டகைமுனு என்ற அரசனின் கதையைச் சொல்லும்போது, தமிழரை உதைத்துத் துரத்தினாலே சிங்கள அரசு அமையமுடியும் என்று உரைக்கிறது.


அவ்வரசனின் தாயோ ஒரு தமிழனின் தலையை அறுத்து, இரத்தம் படிந்த அந்த வாளைக் கழுவி அந்த நீரைக் குடித்தே அவனைக் கருத்தரிக்கிறாள்.


துட்டகைமுனு வெல்லும் தமிழ் அரசனான எல்லாளன் என்பவனோ பெரும் நீதிமானாகத் திகழ்ந்தவன், பௌத்த மடங்களையும் பிக்குகளையும் அரவணைத்து நீதி தவறாது வாழ்ந்தவன். நீதியோ நியாயமோ எமக்கும் தேவையில்லை, தமிழரை உதைத்துத் துரத்துவோம், கொன்று புதைப்போம் என்பதே ''மகா வம்சம்'' உணர்த்தும் செய்தி.


அக்காவியக்கதை சிங்களரிடையே விளைவித்த தாக்கமே அவர்தம் மனத்தில் ஆழ ஊன்றியிருக்கும் இனவெறியின் ஊற்று.


இத்தெளிவைப் பகிர்ந்து கொள்ளவும் ஈழத்தமிரின் விடுதலை வேட்கைக்கு ஆதரவான ஒரு அலையைத் தமிழகத்தில் மீண்டும் உருவாக்கும் எண்ணத்திலும் இந்நாடகத்தை உங்கள் முன் வைக்கிறோம்.


நிகழ்ச்சி ஏற்பாடு

யாதுமாகி... மற்றும் நண்பர்கள்

தொடர்புக்கு: 9443486285 / 9443614556


கருத்துகள் இல்லை: