திங்கள், 15 டிசம்பர், 2008

அறியாது ஆழ்ந்து துயில் கொள்ளும் தமிழ்நாடு

தலையணையின் கீழ் கொடிய விஷப்பாம்பு இனப்பெருக்கம் செய்வதை அறியாது ஆழ்ந்து துயில் கொள்ளும் தமிழ்நாடு

- வீ. ஆனந்தசங்கரி தலைவர்- த.வி.கூ

anandasangaree-4மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும் இலங்கையும் தமக்குள் ஒருபோதும் மோதிக்கொள்ள முடியாது எனக்கூறியிருந்தார். இக் கூற்று தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் கூடுதலாக பொருந்தும். பாக்குத் தொடுவாய்க்கு இரு பக்கத்திலும் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு உதவ நல்லெண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் ஒருவருக்கொருவர் முரண்படாமல் செயல்பட வேண்டுமென பணிவாக வேண்டுகிறேன். இருசாராரும் தமது பேச்சுக்களிலும் நடைமுறைகளிலும்; மிக்க அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமானதாகும். தமிழ்நாட்டுப் பொலிசாரின் கியூ பிரிவும், இந்திய கடற்படையும் குண்டுகள் தயாரிக்க உபயோகிக்கப்படும் பல தொன் எடையுள்ள மூலப் பொருட்களை கண்டுபிடித்தமை பாராட்டக்கூடியதாகும் என்பதுமட்டுமல்ல இலங்கையும் தமிழ்நாடும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற அவசியத்தை இது உறுதிப்படுத்துகிறது.

விடுதலைப்புலிகள் சார்பானவர்களின் சக்திமிக்க பொய் பிரச்சாரத்தால் குழப்பமடைந்து கடும் சினம் கொண்டு இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டிய தம் கடமையை புறக்கணித்து திரும்ப முடியாதளவுக்கு வெகு தூரம் தமிழ்நாடு சென்றுள்ளமையால் அவர்களுக்கான நல் ஆதரவற்றுப் போனது துர்ப்பாக்கியமே.

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் நடந்தேறிய ஆர்ப்பாட்டங்களும் வேறு சில செயற்பாடுகளும் இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமான முறையில் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவே அமைந்துள்ளன. கஷ்டமான இன்றைய உண்மை நிலையை அறிய ஓர் குழுவை இலங்கைக்கு அனுப்பியோ, அன்றி இலங்கையிலிருந்து ஒரு குழுவை வரவழைத்தோ அவர்கள் மூலம் நாட்டு நிலைமை பற்றி அறிந்து செயற்படாதது தமிழ்நாடு செய்த பெரும் தவறாகும். உண்மை நிலையை அறிய மறுத்து, கஷ்டத்தை வரவழைக்க தமிழ்நாடு அடம் பிடிக்குமேயானால் அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. பலர் ஆட்சேபனை எழுப்ப விரும்பினாலும் ஒரு சில உள்ளுரையும், இலங்கையையும் சேர்ந்த பிரமுகர்கள், தமிழ் நாட்டுக்கு உயிரழிவும், சொத்தழிவும் ஏற்படும் வகையில் தமிழ் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை முன்வந்து அம்பலபடுத்த தயங்குகின்றனர். இத்தகைய ஆபத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் எவ்வளவு விரைவாக பரவுகின்றது என்பதை பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் அக்கறையின்றி இருக்கின்றனர். ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை பற்றிய கசப்பான நினைவுகள் அவர்களின் சிந்தனையிலிருந்து படிப்படியாக மறைகின்றது போல் தெரிகின்றது. அவருடைய சடலத்தை உருக்குலைந்து சதைப் பிண்டமாக மீண்டெடுத்ததை இலகுவாக தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே பல அமைச்சர்கள் உட்பட இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களுக்கும், ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ காமினி திசாநாயக்கா அவர்களுக்கும் அவருடன் சேர்ந்து சில அமைச்சர்கள் உட்பட பலருக்கு நடந்தது. பல கிளேமோர் தாக்குதல், குண்டு வெடிப்புக்களில் ஆயிரக்கணக்கான உடல்கள் பகுதி பகுதியாகவே கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் அமைச்சர்கள், இராணுவத்தினர், ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லீம்களும் அடங்குவர். சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் நடந்தேறிய மத்திய வங்கி குண்டு வெடிப்பு ஏறக்குறைய மும்பாயில் நடந்தேறிய அனர்த்தத்தை ஒத்ததாக இருந்ததோடு இறந்தவர்கள் சொற்ப குறைவாகவும், காயப்பட்டவர்கள் கூடுதலாகவும் இருந்துள்ளனர். ஒரு கிராமப்புறத்திலிருந்து பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் அண்மையில் உள்ள நகரத்துக்கு சென்ற உத்தியோகத்தர்களை கொண்டு நிறைந்திருந்த பேருந்து இலக்கு வைக்கப்பட்டு 65 பேரின் உயிரை குடித்ததோடு அதே தொகையினரை படுகாயமடையவும் செய்தனர். இரு பேரூந்துகளில் நிறைந்திருந்த கடற்படையினர் நூற்றுக்கு மேலானோர் ஒரு தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டனர். பாதுகாப்புச் செயலாளர், இராணுவத்தளபதி உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட அநேகர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள ஒருவரேனும் தம் மண்ணில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். நடந்தேறிய பல்வேறு சம்பவங்களில் இவை ஒரு சிலவாகும்.

விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளையே அவர்கள் தற்கொலை குண்டுதாரியாக உபயோகித்தனர். கர்ப்பிணி பெண்களை கூட இதற்கு உபயோகித்தனர். கடந்த வருடம் மட்டும் கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள் 20,000 இற்கு மேற்பட்டோர் யுத்த களத்தில் பலி கொடுக்கப்பட்டுள்ளனர். இன்று அத்தொகை மேலும் அதிகரித்திருக்கும். புதிதாக சேர்க்கப்பட்ட மிகக் குறுகியகால பயிற்சிபெற்ற இளைஞர்களும் யுவதிகளும் தினமும் விடுதலைப் புலிகளால் யுத்த களத்தில் பலியிடப்படுகின்றனர். தங்களை மீறி பேசுகின்றவர்கள், பிள்ளைகளை பலாத்காரமாக சேர்ப்பதை ஆட்சேபிப்பவர்கள், பயிற்சி முகாம்களில் இருந்து தப்பியோடியவர்கள் ஆகியோரை தண்டிக்க கடைபிடிக்கப்படும் சித்திரவதை முறைகள் நாகரீக உலகில் கேட்டறியாததாகும். விடுதலைப் புலிகளின் இத்தகைய முகாம்களில் இருந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை காப்பாற்ற தமிழ்நாடு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? பல ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் விடுதலைப் புலிகளுக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் இருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கைவிலங்குகள் கைப்பற்றப்பட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு சட்டவிரோதமாக அனுப்புவதற்கென தொன் கணக்கான குண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டு பொலிசாரும், இந்திய கடற்படையினரும் அண்மையில் பல இடங்களில் கைப்பற்றியதை இலங்கை மக்கள் நன்றியறிதலுடன் பாராட்டுகின்றனர். விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதன் மூலம் தமிழ்நாடு எத்தகைய ஆபத்தை எதிர்நோக்குகிறது என்பதை நான் சுட்டிக்காட்டத் தேவையில்லை.

தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை விடுதலைப் புலிகள் எவ்வாறு துன்பப்படுத்துகிறார்கள் என்பது பற்றியும், அவர்களின் பல்வேறு அடாவடித்தனங்கள் பற்றியும் நான் நிறைய கூறியும், எழுதியும் உள்ளேன். தமிழ் நாட்டு மக்கள் இவர்களை விடுதலை போராளிகள் என இன்றும் நம்புவார்களாக இருந்தால் தமிழ்நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இலங்கை மக்கள் இன்று விரும்புவதெல்லாம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதும், கொடூரமான பயங்கரவாத கும்பலில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதுமே. விடுதலைப் புலிகளில் அக்கறை கொண்ட சிலர் அவர்களை மீட்டெடுக்க மிகக் கடுமையாக முயற்சிக்கின்றனர். வேடிக்கை என்னவெனில் முழு தமிழ்நாடும் ஒரு உள்ளுர் பிரமுகர்கள் சிலரையும் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பலத்தாலும், அச்சுறுத்தலாலும், மிரட்டலாலும் மோசடி மூலம் இலங்கையில் தெரிவான 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக செயற்படாமல் விடுதலைப்புலிகளின் பினாமிகளாக செயற்பட்டு வருகின்றவர்களையே நம்புகின்றனர். தேர்தல் காலத்தில் கண்காணிப்புக் குழுவாக செயற்பட்ட நான்கு பல்வேறு குழுக்களில் இரண்டு ஐரோப்பிய யூனியன,; பொதுநலவாய ஆகிய நிறுவனங்களால் விடப்பட்ட அறிக்கை இதை தெளிவுபடுத்தும். இதன் மூலம் இலங்கை தமிழ் மக்களுக்காக பேசவோ அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உரிமையோ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடையாது.

தமிழ்நாட்டு மக்கள்; என் மீது நம்பிக்கை கொள்ளாமை கவலைக்குரியதாகும். நான் என் நாட்டையும், அதன் மக்களையும் மட்டுமன்றி இந்தியாவை தாய்நாடாக மதிப்பவன். இந்திய தேச பக்தர்களையும் மகாத்மாகாந்தி, நேருஜி, இந்திராஜி போன்ற பல சுதந்திரப் போராட்டக்காரர்களையும் அத்துடன் தமிழ்நாட்டு தலைவர்களாகிய ராஜாஜி, கர்மவீரர் காமராஜர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பலரையும் மதித்து நேசிப்பவன். ஒரு சில நன்றி கெட்ட குழுவால் சிதறடிக்கப்பட்ட கம்பீரமான தோற்றம் கொண்ட பெரும் தியாகியாகிய ராஜீவ்காந்தி அவர்களையும் இங்கே விசேடமாக குறிப்பிட வேண்டும். பெண்களையும், பிறர் பிள்ளைகளையும் தனது பலிக்கடாவாக கொண்டு செயற்படும் மிக பிரபல்யமான கோழையென வர்ணிக்கப்பட வேண்டிய ஒருவரை மாவீர தமிழனாக ஏற்றுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு ஆலோசனை கூறும் தகுதி எனக்குண்டா? அண்மையில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள், மனிதசங்கிலி போராட்டம், பட்டினி போராட்டம், அமர்ந்திருந்து வேலை நிறுத்தம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கெடுத்து தமிழ் உரிமைக்காக தான் பெரும் பங்களிப்பு செய்து விட்டேன் என்று மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அப்பாவி தமிழன் இக் கேள்வியை எழுப்பலாம். அதற்கு நான் கூறும் சுருக்கமான, எளிய பதில் என்னவெனில் நான் காந்திஜியை பின்பற்றுபவன் என்பதும் என்னால் முடிந்தவரை அவருடைய இலட்சியத்தை கடைபிடிப்பவன் என்பதோடு அகிம்சையை கடைபிடிப்பவன் ஆகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபக தலைவர் கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம் கியூ.சி அவர்களும் அகிம்சையை கடைபிடித்தவர் ஆவர். ஆனால் அவரின் சிஷ்யர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலர் அவரின் லட்சியத்தை காற்றில் பறக்கவிட்டு ஓர் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கின்றனர். நான் பல ஆண்டுகள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய, என் முயற்சியால் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சிக்கு யுத்த மேகம் நகர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வன்னி மக்களை புலிகளிடமிருந்து விடுவிக்க பல முயற்சிகளை செய்தேன். எமது மக்களின் அநேக அடிப்படை, மனித உரிமைகள் ஆகியவற்றை பறித்தெடுத்த விடுதலை வீரர்களிடமிருந்து கிளிநொச்சி மக்களை விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய சகல ஜனநாயக உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நட்புடன் ஒரு இராணுவம் தம்மை விடுவிக்க முன்வருமேயானால் அதற்கு தமதுமுழு ஆதரவையும் கொடுப்பதற்கு கிளிநொச்சி மக்கள் தயாராக உள்ளனர் என ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தேன். அத்துடன் 2006ம் ஆண்டு யுனெஸ்கோ ஸ்தாபனம் சகிப்புத் தன்மையையும், அகிம்சையையும் முன்னெடுக்க தந்த மதன்ஜித் சிங் பரிசையும் பெற்றுள்ளேன். எனக்கு தமிழ்நாட்டுக்கு ஆலோசனை வழங்கும் தகுதி உண்டு என்பதை தமிழ்நாடு ஒத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

கடலுக்கு அப்பால் இருக்கும் ஒரு தமிழனின் கற்பனைக்கு, விடுதலைப் புலிகளின் அக்கிரம செயல்கள் எட்டாது. ஏதோ மர்ம காரணத்தால் உலகம் முழுதும் உள்ள தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை மிகைப்படுத்தி பாராட்டினவே அன்றி அவர்களின் குற்றங்களை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. இதேநிலைதான் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் ஆகும். காலத்துக்கு காலம் தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி குறைந்த பட்சம் 15 கடிதங்கள், அறிக்கைகள், தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் மக்களுக்கும் வேண்டுதல்கள் என்னால் விடப்பட்டபோதும் அவற்றில் ஒன்றையேனும் ஊடகங்கள் முழுதாக பிரசுரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் பற்றிய அபிப்பிராயத்தை வெளிப்படையாக கூறுவதால் சமூகத்தில் எனக்குள்ள ஆபத்தை ஒருவரும் உணர்வதில்லை. அவர்கள் எனக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளனர். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுக்கு அவர்கள் வழங்கும் கௌரவம் இதுவாகும்.

இலங்கை தமிழர்களாகிய நாம் இத்தகைய வேதனையோடும் நிரந்தர பயபீதியோடும் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்கிறோம். தமிழ் நாட்டில் அமைதியாக வாழும் மக்கள் தம் மண்ணிலும் இத்தகைய சம்பவங்கள் நடக்க வேண்டுமென விரும்புகிறார்களா? இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் அல்லது உலகில் எப்பகுதியில் வாழும் தமிழர்களும் பயங்கரவாதத்தை நிலைகொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்கக்கூடாது என்ற பாடத்தை மும்பாய் அனர்த்தத்தின் மூலமாகவேனும் கற்றுக்கொள்ள வில்லையா? விடுதலைப் புலிகள் தலைவரை வீரம் நிறைந்த கதாநாயகனாக கணிக்கும் விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் ஒருவரேனும் தமது ஒரு மகனை அல்லது மகளை விடுதலைப் புலிகள் தலைவரின் போராட்டத்திற்கு தருவதற்கு தயாரா? அண்மையில் தமிழ்நாட்டில் இந்த ஆர்பாட்டங்களில் கலந்து கொண்ட மாணவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும் பிரபாகரனுடன் இணைந்துகொள்ள தயாரா என்றும் அதேபோன்று சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரில் ஒருவரேனும் பிரபாகரனுடன் சேரவோ அல்லது தனது மகன் அல்லது மகள் ஒருவரை பிரபாகரனுடன் சேர வைக்கவோ தயாரா? தயார் இல்லையெனில் அவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளுமாறு பணிவாக வேண்டுகிறேன்.

எமது நாட்டில், சந்தேகமில்லாமல், ஓர் பெரிய பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை பலி கொண்டு, பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அழித்து தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. எமது புத்திஜீவிகள், உயர்மட்ட அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் இன்னும் பலர் விடுதலைப் புலிகளாலேயே கொல்லப்பட்டார்களே அன்றி ஒருவரேனும் ஒரு சிங்களவரால் என்றும் கொலை செய்யப்படவில்லை. ஆனால் யுத்தமுனையில் எமது பல இளைஞர்களும், யுவதிகளும் இராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள் என்று கூறுவதிலும் பார்க்க அவர்கள் தேவையற்று விடுதலைப் புலிகளால் பலியிடப்படுகிறார்கள் என்று கூறுவது பொருத்தமானதாகும். அப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். உங்கள் முழு சக்தியையும் உபயோகித்து ஓர் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசை உங்கள் முழு சக்தியை உபயோகித்து வற்புறுத்துங்கள். தமிழ் நாட்டிலும் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஒத்த ஒரு தீர்வை முன் வைத்து பேச்சை ஆரம்பிக்கலாம். இலங்கைத் தமிழர்கள் சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்று தமிழ்நாடு விரும்பினால், தமிழ்நாட்டுக்கு உள்ள ஒரே வழி இதுவாகும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை தமிழர்கள் ஏற்க தயாராக உள்ளனர். தமிழர்கள் பிரிவினையை எதிர்க்கின்றனர். ஏனெனில் அது இந்தியா உட்பட எந்த நாட்டுக்கும் ஏற்புடையதாக இல்லாமையால்.

இலங்கை அரசு தமிழர்களை பூண்டோடு அழிக்க முயற்சிக்கின்றது என்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டு மிக அபத்தமானது. அதை ஆமோதித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சந்தையில் பரப்ப முயற்சிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் கொடூர செயல்களால் பல மக்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர். பரம்பரை பரம்பரையாக தாம்; வாழ்ந்த பகுதிகளில் தமது இல்லங்களை விட்டு பலர் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்கின்றனர். இன்று 50 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் அவர்களுடனேயே இவ்வாறு வாழ்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு சொத்துக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு 500 ரூபா பணத்துடன் விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் தம் சொந்த இடங்களில் மீளக் குடியமரும் வரை தமிழ் நாட்டு முஸ்லீம் மகன் ஒருவரேனும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க தார்மீக உரிமை கிடையாது.

நான் எவருக்கேனும் வக்காலத்து வாங்கியோ, முகவராகவோ செயற்படவில்லை. மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை பெற்று கொடுக்கக் கூடிய கடமை எனக்குண்டு. குற்றவாளி யாரென்று அடையாளம் காணமுடியாத வகையில் எமது நாட்டில் மனித உரிமைகள் பல மீறப்பட்டுள்ளன. பயத்தின் நிமித்தம் வாக்குமூலம் அளிக்க யாரும் முன் வராமையினால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சிரமமானதாகும். இனப்பிரச்சினை தீரும் வரைக்கும் மக்கள் பயத்துடனும் பீதியுடனும் வாழ வேண்டிய நிலைமையே நீடிக்கும். இச் சம்பவங்களில் பலர் ஈடுபட்டுள்ளமையால் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஓர் அமைப்பையோ குற்றஞ்சாட்ட முடியாது. தமிழ் நாடு ஒரே குரலில் விடுதலைப் புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாட்டுஅரசு சிபாரிசு செய்யும் ஒரு நியாயமான தீர்வை விடுதலைப் புலிகளை ஏற்க வைப்பதே தமிழ்நடு செய்யக்கூடிய பெரும் கைங்கரியமாகும்.

கிழக்கு மாகாணத்திலே 200 மைல்களுக்கு அப்பால் பொத்துவிலில் ஆரம்பித்த யுத்தம் தற்போது வட மாகாணத்தின் கிளிநொச்சியில் இருந்து 10, 15 மைல்கள் நகர்வுடன் முடிவுக்கு வர உள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் 90 வீதம் மீட்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக அவர்களின் ஆதிக்கத்திற்குள் வாழ்ந்த மக்கள் இன்று சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். இன்னும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை தமது பாதுகாப்புக்காக மனித கேடயமாக உபயோகிக்காமல் தமிழ் நாட்டுக்கு எம் மக்கள் மீது உண்மையான அக்கறை இருப்பின் அவர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து தர வேண்டும். அப்படியானால்தான் யுத்தம் முடிவுக்கு வந்து யுத்த முனையில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களினதும், யுவதிகளினதும் உயிர்களை பாதுகாக்க முடியும்.

அதன் பின் விடுதலைப் புலிகள் தமிழ், முஸ்லீம் பிரதிநிதிகளுடன் சேர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள 20 இற்கு மேற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் எவரேனும் எனது அறிக்கை முடிந்தால் மறுத்து தெரிவிக்கட்டும்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

இதே கட்டுரை இன்றைய (15.12.2008) தினமலர் நாளிதழிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

: http://www.thenee.com/html/111208.ஹ்த்ம்ல்கருத்துகள் இல்லை: