வியாழன், 19 பிப்ரவரி, 2009

'ஸ்வாட்' பகுதி விவகாரத்தால் பிரச்னை விஸ்வரூபம்!: தலிபான்கள் ஆதிக்கம் அதிகமாகும் அச்சம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைதி வருமா அல்லது தலிபான் சட்டத் திட்டம், பாகிஸ்தானில் உள்ள மற்ற மாகாணங்களுக்கும் பரவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்வாட் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் மதச் சட்டம் குறித்து உலக நாடுகள் பலவும் பேசும் அளவுக்கு பெரியதாகியுள்ளது.


ஆப்கான் எல்லைக்கருகே அமைந்த வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலிபான்கள் கோலோச்சி வருகின்றனர். இங்குள்ளது ஸ்வாட் பள்ளத்தாக்கு. இதன் மக்கள் தொகை மொத்தம் 50 லட்சம். திங்கள் கிழமையன்று, இப்பகுதியில் தலிபான் கட்டளைகளை நிறைவேற்றும் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - நிபாஸ் - இ - ஷரியா முகமதி (சுருக்கமாக டி.என்.எஸ்.எம்.,) என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் தலைவரான மவுலானா சுபி முகமதுக்கும், பாக்., அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, இஸ்லாமிய மதச்சட்டமான ஷரியா இங்கே பின்பற்றப்படும். ஸ்வாட் என்னும் பகுதி, பாகிஸ்தானுடன் 1969ல் இணைந்தது. அதற்கு முன், மன்னர் வாரிசு ஆண்ட தனி மாகாணம். பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப் படும் இங்கே, இப்போது தலிபான் கை ஓங்கியிருக்கிறது.


இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது இங்கே விரைவாக நீதியும், நியாயமும் கிடைக்கத்தானே தவிர, வேறு ஏதுமில்லையென்று இங்குள்ள அமைச்சர் பஷீர் கூறுகிறார். மேலும், டி.என்.எஸ்.எம்., அமைப்பின் தலைவர் சுபி முகமதுவின் மருமகன் மவுலானா பசுல்லா. இவர், இப்பகுதியின் தலிபான் தலைவர். மவுலானா பசுல்லாவுடன் சுபி பேச்சு நடத்த முடிவு செய்திருக்கிறார். வன்முறை களமான ஸ்வாட் பகுதியில், அமைதிப் பேரணியை நடத்தினார் மவுலானா சுபி முகமது. ஸ்வாட்டில் உள்ள மின்கோரா என்ற நகரில் இவர் நடத்திய பேரணி அமைதிப் பேரணியாகும். இங்கு ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் குறைக்க முயற்சிப்பதாக, இவர் தன் பேச்சில் வெளிப்படுத்தினார்.


தலிபான் ஆதரவாளர்களிடம் ஆயுதங்களைக் கீழே போடுமாறு கேட்டுக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். சுமுகமாக முடிந்தால், அப்புறம் இப்பகுதியில் வன்முறை வெடிக்காது என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான் அரசுக்கும், ஸ்வாட் தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுக்களில், அடிப்படையில் இங்குள்ள தலிபான்கள் தங்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அது நிறைவேறுமா என்ற சந்தேகம் பாக்., அரசிடமே இருக்கிறது. இந்த முடிவால் தலிபான்கள் செல்வாக்கு அதிகரிப்பதுடன், மற்ற மாகாணங்களிலும் மதச் சட்டம் அமலாக்க வலியுறுத்தப்படும் நிலை ஏற்படும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. அதனால், ஒருவித பீதி ஏற் பட்டிருக்கிறது.


ஏனெனில், ஸ்வாட் பகுதியைச் சேர்ந்த பலர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவர்களிடம் கட்டாய பண வசூல் செய்கிறது தலிபான் அமைப்பு. இம்மாதிரி மதச்சட்டத்திற்கு அங்கீகாரத்தை தந்த பாக்., அரசின் செயல், அடுத்ததாக என்ன பிரச்னையை ஏற்படுத்துமோ என்ற கருத்து எழுந்திருக்கிறது. மேலும் பிரிட்டன், நேடோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், பாக்., அரசு மேற்கொண்ட உடன்பாடு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன. "பாகிஸ்தானில் ஏற் பட்டிருக்கும் பல்வேறு சம்பவங்கள் கவலை தருகின்றன' என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3043&cls=row4

கருத்துகள் இல்லை: