வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

புலிகள் - மௌனம் ஏன்? மறைப்பது எதற்கு? எதிர்கொள்வது எப்படி?

புலிகள்

மௌனம் ஏன்?

மறைப்பது எதற்கு?

எதிர்கொள்வது எப்படி?


பொய்ச் செய்திகளால் குவிந்துகிடக்கிறது போர்!

பிரபாகரன் முல்லைத் தீவை விட்டு எப்போதோ போய்விட்டார், அங்கு முக்கியத் தளபதிகளே இல்லை, இன்னும் ஒரு சில நாட்களில் முல்லைத் தீவுப் பகுதியையும் இராணுவம் கைப்பற்றிவிடும், இப்போது சுமார் 600 போராளிகள்தான் அமைப்பில் இருக்கிறார்கள், அவர்கள்தான் மக்களைக் காட்டைவிட்டு வெளியில் விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள், மரபுரீதியான ராணுவமாக இருந்த புலிகள், இன்று அதை இழந்துவிட்டார்கள், வெறுமனே காடுகளில் மறைந்திருந்து சில கொரில்ல தாக்குதல்களை நடத்த மட்டுமே அவர்களால் இனி முடியும். அவர்ளது விமானப்படை ஓடுதளம் அத்தனையும் கைப்பற்றப்பட்டுவிட்டன, இனி அவர்களால் வான் படையை இயக்க முடியாது, சாலை என்ற கடற்படை முகாமையும் கைப்பற்றிவிட்டதால், அவர்களால் கடல் பகுதியிலும் எந்தத் தாக்குதலையும் செய்ய முடியாது, மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள் எரிபொருட்கள் தான் அவர்களிடம் இருக்கிறது, அத்தனை சக்திகளையும் இழந்துவிட்டார்கள்... இப்படி தினந்தோறும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

“புலிகளால் இனி எழுந்திருக்க முடியாது, அவர்களது கதை முடிந்துவிட்டது“ என்கிறார் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா. “கடல் மார்க்கத்தின் அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கடலில் விழுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இல்லை“ என்று கடற்படை தளபதி வசந்த கருணாகொட கர்ஜிக்கிறார். “புலிகள் ஆயுதத்தைக் கீழே போடும் வரை போர் நிறுத்தம் கிடையாது. இன்னும் சில நாட்களில் எங்களது எண்ணம் நிறைவேறும்“ என்று மகிழ்கிறார் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே.

அத்தனைக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது மாதிரி கொழும்புக்குள் வான் படையைச் செலுத்தி மிரளவைத்துள்ளார்கள் புலிகள். ரூபன், சிரித்திரன் ஆகிய இரண்டு போராளிகள் இதில் இறந்துபோனார்கள். நான்கு மாதங்களுக்கு முன்னால் புலிகளின் வான்படை இதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தியது. எனவேதான், அவர்களது விமானங்களை அழிக்க வேண்டும் என்று ராணுவம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. அத்தனையும் வீண் என்பதைக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் வெளிச்சப்படுத்தி இருக்கிறது.

இவை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் இதே நபர்கள் சொல்லி வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றன. “எனக்கு ஓர் ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது“ என்று மெதுவாக ஆரம்பித்திருக்கிறார் சரத் ஃபொன்சேகா. அவரது எடுபிடியாக மாறிப்போன கருணா “புலிகளை ஒடுக்கி, முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வர இன்னும் 18 மாத காலம் ஆகலாம்“ என்று கண்டுபிடித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் சொன்னபடி பார்த்தால், அவர்கள் புலிகள் அனைவரையும் ஒழித்துவிட்டு கடந்த 4-ஆம் தேதியுடன் “இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்க வேண்டும். மாறாக, தங்கள் கொடூரத்துக்கு இன்னும் ஓராண்டு காலம் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படிக் காலத்தைத் தள்ளிப்போட புலிகளின் ஆக்ரோஷமான எதிர்த்தாக்குதல்தான் காரணமாக இருக்க முடியம்.

பொதுவாக, தங்களின் சிறு அசைவுகளையும் ஆபரேஷன்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்த புலிகள் இப்போது அடக்கி வாசிப்பது அவர்கள் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது. புலி ஆதரவாளர்களே சோர்ந்துபோய் “இனி நல்ல செய்தி வராதா?“ என்ற ஏக்கத்தோடு வலம்வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. புலிகளின் வியூகங்களால் மிரண்டு சிங்கள ராணுவம் உறைந்து போயிருப்பதாகத் தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. “இன்னும் சில அங்குலம் நிலத்தை இழந்தால்கூடத் தலை தப்புவது சிரமம்“ என்பதால் கடைசிக்கட்ட கோபத்தைப் புலிகள் காட்டி வருகிறார்களாம். அவர்களது வியப்பூட்டும் வியூகம், விறுவிறுப்பான வேகம், அச்சுறுத்தும் அமைதி... மூன்றும்தான் இன்று புலிகளுக்குக் கைகொடுத்து வருகிறதாம். சமீபத்தில் வெளியான சில தகவல்கள் அதிர்ச்சியைக் கிளப்புகின்றன.

மௌனம் ஏன்?

கடந்து போன ஆண்டு, புலிகளுக்கு உண்மையில் கஷ்ட காலம். அவர்கள் கையில் இருந்த பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இழந்தார்கள். இந்தப்போரை ஆரம்பித்த ராஜபக்ஷேவிடம், சரத் ஃபொன்சேகா புதிய உத்தியைச் சொல்லிக் கொடுத்தார். “இதுவரை அவர்கள் வைத்திருந்ததை நாம் பறித்தோம். பிறகு, அவர்கள் பறித்தார்கள். நாம் மறுபடி பறிக்கிறோம். இப்படியே போனால் ஆட்டம் நிற்காது. இன்னும் 30 வருஷத்துக்குத் தொடரும். எனவே முதலில் புலிகள் அமைப்பின் அள் பலத்தைக் குறைக்க வேண்டும். அதைச் செய்யாமல் அந்த அமைப்பை ஒழிக்க முடியாது“ என்று சொன்னார். அதற்கான திட்டத்தை ஃபொன்சேகா போட்டார். அதாவது ஒவ்வொரு இடமாகப் போய் சும்மா தாக்குதல் நடத்திவிட்டுப் பின்வாங்குவது!

ஒவ்வொரு தாக்குதலிலும் பத்து இருபது என்று இறந்தால் ஒரு வருஷத்தில் மொத்தத்தையும் முடித்து விடலாம் என்று திட்டமிட்டார்கள். இலக்கே இல்லாமல் குண்டுகளைப் பயன்படுத்தியது இதனால்தான்.

“இதையே கொஞ்சம் மாற்றி யோசித்தார்கள் புலிகள். “இடத்தை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். போராளிகள்தான் முக்கியம். அவர்களில் யாரையும் இழக்கக் கூடாது. எனவே பின்வாங்கலாம் என்று பிரபாகரன் முடிவெடுத்தார். எனவேதான் பல இடங்களை விட்டு வர ஆரம்பித்தார்கள். அப்போதும் சும்மா பின்வாங்காமல் எதிர்த் தாக்குதலைச் சில நாட்கள் நடத்துவார்கள். புலிகள் சரணடையத் தொடங்கிவிட்டார்கள் என்று படைவீரர்களை ஒரே இடத்தில் குவிக்க ஆரம்பித்ததும், அங்கு தாக்குதலை அதிகப்படுத்துவார்கள். பிறகு, எந்தச் சத்தமும் இல்லாமல் பின்வாங்கி வேறு பகுதிக்கு இடம் பெயர்வார்கள். இந்தக் தாக்குதல்கள்தான் கடந்த ஐந்து மாதங்களாக நடந்திருக்கின்றன. “சொற்ப இழப்பு, குறைந்த வெடிபொருட்களைப் பயன்படுத்துவது, இலக்கை மட்டுமே அடிப்பது, ராணுவ வீரர்களைக் கொல்வது, ஆயுதங்களைக் கைப்பற்றுவது“ ஆகிய ஐந்து கட்டளைகள்தான் பிரபாகரன் தனது தளபதிகளுக்கு இட்டுள்ள பஞ்ச சீலம்.

இலங்கை நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு புள்ளி விவரம் படிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரம் பேர் பலத்த காயம் அடைந்து உடல் ஊனமுற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. புலிகள் சும்மா இருந்தால், இவ்வளவு சேதமாக ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம், புலிகள் தங்களது முழு அளவிலான பலத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தவில்லை. அவர்கள் “ஓயாத அலைகள்-1“ நடத்தி முல்லைத் தீவைப் பிடித்தார்கள். அடுத்து கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள். ஓயாத அலைகள்-3” ஆனையிறவை வாங்கிக் கொடுத்தது. அதாவது, இரண்டு ஆண்டு இடைவெளியில் வரிசையாக இதைப் பிடித்துக்காட்டிய தளபதிகளில் பால்ராஜ் தவிர, அத்தனை பேரும் இன்றும் பிரபாகரனுடன் இருக்கிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் அதைவிட ஆயுதங்கள் அதிகமாகி இருக்கின்றன. ஆட்கள் அதிகமாகி இருக்கிறார்கள். ஆனாலும், பிரபாகரன் முழு பலத்தையும் பயன்படுத்தவில்லை.

பல கிலோ மீட்டர் பகுதிகளை அவர்கள் இழந்துள்ளது உண்மைதான். ஆனால், தளபதிகள், போராளிகள், ஆயுதங்கள், பீரங்கிகள், கப்பல்களை இழக்காமல் பழைய பலத்துடன் அப்படியே இருக்கிறார்கள்.

மறைப்பது எதற்கு?

மிகப்பெரிய தாக்குதல்களைச் சேதாரம் இல்லாமல் புலிகள் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பதைத் தன்னை அறியாமல் ஒப்புக்கொண்டு இருக்கிறார் அதிகர் மகிந்த ராஜபஷே. சிங்களப் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில், “பிப்ரவரி முதல் நான்கு நாட்கள் எங்கள் படைக்கு பெரிய இழப்புகள்தான்“ என்று அவர் சொல்லியிருக்கிறார். அதாவது, பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடர்ந்து 72 மணி நேரம் புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். “நாங்கள் தற்காப்புத் தாக்குதல்தான் நடத்துகிறோம்“ என்று சொல்லி வந்த புலிகள், முதல் தடவையாகத் தாக்குதலை அவர்களாகவே தொடங்கினார்கள்.

புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான ஏற்பாட்டில் சிங்கள் ராணுவம் மும்முரமாக இருந்த்து. 59-வது படையணியின் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்தா இதற்குத் தலைமை தாங்கினார். உடையார் கட்டுப் பகுதியில் 62-வது பிரிவும் இருந்த்து. புலிகள் 59-வது படையை வளைத்துத் தாக்குதலை நடத்தியது. முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு தெற்கு ஆகிய மூன்று இடங்களிலும் முக்கோணமாகச் சுற்றித் தாக்குதலை நடத்தினார்கள். ஆர்ட்டிலரி மோட்டார் மூலம் ஷெல் அடித்தார்கள். ஒருநாள் முழுவதும் அடித்த அடியில் ராணுவம் பின்வாங்கியது. இது ஒரு பக்கம் நடக்கும்போதே, வற்றாப்பளைக்கும் கோப்பாப்புலாவுக்கும் இடையில் புலிகளின் படை கடலில் இறங்கியிருக்கிறது. அவர்கள் ராணுவத்தைப் பின்னால் இருந்து வளைத்துள்ளார்கள். இதில் ராணுவத்தின் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அழிக்கப்பட்டன. அதன் பிறகுதான் படை பின்வாங்கியிருக்கிறது. 150 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இரண்டு லாரிகள் நிறையத் துப்பாக்கிகளைப் பறித்ததாகவும் புலிகள் சொன்னார்கள். போர் டாங்கிகள், கவச வாகனங்கள், டிரக் வண்டிகள் எனப் பலவற்றையும் புலிகள் கைப்பற்றினார்கள். ஆனால், 59-வது படையணியின் 3-வது டிவிஷன் மொத்தமாக அழிந்ததாகக் கொழும்பில் உண்மைத் தகவல் பரவி... ராணுவத்தினரின் குடும்பத்தினர் கூடிவிட்டார்கள். இதன் பிறகே அங்கிருந்த மீடியாக்களின் குரல்வளை மொத்தமாக நெரிக்கப்பட்டது. அன்று முதல் ராணுவத்தை முன்னேறவிடாமல் கடுமையான தடுப்பரண்களைப் புலிகள் போட்டுவைத்துள்ளனர். “சிங்கள ராணுவத்தின் குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தினமும் இறந்து வருவதைப் பார்த்து உலகமெங்கும் அனுதாப அலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் தங்களது பலமான தாக்குதல்கள் வெளியில் தெரிந்தால், அது அனுதாப அலையின் வீச்சைக் குறைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். எனவேதான் தாக்குதலையும் நடத்திக் கொண்டு, அது வெளியில் பரவாமலும் வைத்துள்ளார்கள். இது ஒருவகையான அரசியல் தந்திரம் என்று சொல்லப்படுகிறது.

அது சிங்கள ராணுவத்த்துக்கும் தெரியும். ஊருக்குத் தெரியாமல் ஊமைக் காயமாகவே இருக்கட்டும் எனறு நினைக்கிறது ராணுவம்.

எதிர்கொள்வது எப்படி?

இன்றைய நிலவரப்படி, ஆனையிறவுக்குத் தென் கிழக்கே முள்ளியான், செம்பியன் பற்று, கட்டைக்காடு, சுண்டிக்குளம் பகுதிகளில்தான் புலிகள் இருக்கிறார்கள். இதையும் கைப்பற்றிய பிறகுதான் ராணுவத்தால் முல்லைத்தீவை நெருங்க முடியும். இந்த நான்கு ஊர்களைக் கைப்பற்றினால் தான் ஏ-35 சாலை (பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை), ஏ-34 (மாங்குளம் முதல் முல்லைத்தீவு வரை) ஆகிய இரண்டு சாலைகளுக்குள் புலிகளை முடக்க முடியும். ஏ-9 என்ற பாதையை இராணுவம் வைத்திருப்பதுதான் புலிகளுக்குப் பெரிய சிக்கல். இதைத் தாண்டிய பகுதிக்குள்தான் மூன்று லட்சம் மக்கள் இருக்கிறார்கள். பொதுமக்களை வெளியேற்றாமல், ராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது. எனவேதான் தினந்தோறும் நூறு பேரைக் கொன்று தனது திட்டத்தைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது ராணுவம்.

சிங்கள ராணுவத்தின் எட்டுப் படையணிகள் இந்தப் பகுதியைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. “இதில் சுமார் 50 ஆயிரம் பேரை இறக்கியிருக்கிறேன்“ என்று ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதுதான் அடுத்த இலக்கு. “இருபதுக்கும் மேற்பட்ட மேப்களை வைத்துப் படை நடத்திய எனக்கு இந்த சின்ன மேப் எம்மாத்திரம்?“ என்று சொல்லியிருக்கிறார் அவர். அந்த அளவுக்கு புதுக்குடியிருப்பு சின்னப்பகுதி. ஆனாலும், மூன்று வாரங்களாக ராணுவம் அந்த இடத்தில் திணறிக் கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக, காட்டுக்குள் இருந்து கொண்டு ராணுவத்தைத் தாக்குவார்கள் புலிகள். ஆனால், இம்முறை புதுக்குடியிருப்பு நகர் பகுதியை அவர்கள் வைத்துக்கொண்டு, காட்டுக்குள் ராணுவத்தை நுழையவிட்டுள்ளார்கள். புலிகள் எப்போதும் நள்ளிரவு நேரங்களில்தான் தாக்குதலை ஆரம்பிப்பார்கள். ஆனால், இப்போது பகல் நேரங்களில்தான் தாக்குதலை நடத்துகிறார்களாம். எனவே, புதுக்குடியிருப்பைத் தாண்டி இன்னும் பல எல்லைகளைத் தாண்டிய பிறகு தான் முல்லைத்தீவுக்கு வரமுடியும்.

மொத்தம் 600 புலிகள்தான் இருப்பதாக ராணுவம் சொல்கிறது. ஆனால், புலிகள் ஆதரவு இணையதளங்கள் 15 ஆயிரம் பேர் என்கின்றன. கடந்த மூன்றாண்டுகளாக அங்குள்ள மக்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்தார்கள். மூன்று இலட்சம் மக்களில் 10 சதம் பேர் போர்ப் பயிற்சி பெற்றவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், 30 ஆயிரம் பேர் தற்காப்பு யுத்தத்துக்குத் தயாராக இருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து 45 ஆயிரம் ஆயத்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. “ராணுவ முகாம்களைத் தேடிச் சண்டையிடுவதைவிட அவர்களை தங்கள் இடத்துக்கு வரவழைத்து யுத்தம் நடத்துவதன் மூலம் பஞ்ச சீல இலக்கை அடையலாம்“ என்பது புலிகளின் கணக்கு.

தரைப் படைக்கு அடுத்த முக்கியத்துவம் கடற்படைக்குத்தான் இனி இருக்கும். அனைத்துலக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் கணக்குப்படி புலிகளிடம் 15 கப்பல்கள் இருக்கின்றன. இவை பல நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாடகைக்கும் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். வர்த்தகத்தைத் தாண்டிய ஆயுதப் போக்குவரத்துக்கும் இதைப் பயன்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட அதிவேகப் படகுகள் இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னால் முல்லைத் தீவு கடல் பகுதியில் புலிகள் தப்பிவிடாமல் இருக்க, 25-க்கும் மேற்பட்ட அதி விஷேசப் படகுகளை இலங்க கடற்படை நிறுத்தியிருந்தது. ஆனால், கடற்புலிகளின் லெப்டினென்ட் பதி தலைமையில் எதிர்த்தாக்குதல் நடத்திக் கலைத்ததில். கடற்படை இப்போது நடுக்கடலில் நிற்கிறது. முல்லைத்தீவு முதல் வடமராச்சி கிழக்கு வரை 40 கி.மீ. தூரக் கடற்கரைப் பகுதி புலிகளிடம் இருந்தது. இப்போது 20 கி.மீ. தான் உள்ளது. சண்டைக்கான ஆயத்தங்களை இரண்டு தரப்புமே இங்குதான் செய்து வருகின்றன.

ஆறு விமானங்கள் புலிகள் வசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளது. பொதுவாக, விமானங்களைக் குறிவைப்பதை விஷேச ஆபரேஷன்களாகப் புலிகள் சொல்வார்கள். பலாலியில் இருந்து விமானத்தில் சென்ற பேபி. சுப்பிரமணியம் வெடிகுண்டுப் பையை வைத்துவிட்டு இறங்க, விமானம் வெடித்துச் சிதறியது. முப்பதாண்டுகளுக்கு முன் இது நடந்தது. அடுத்ததாக கேப்டன் கண்ணன் தலைமையில் கரும்புலிகள் 15 பேர் பெரிய தாக்குதலை நடத்தி, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விமானங்களைத் தகர்த்தார்கள். மொத்த ராணுவமும் விமான நிலையத்தைச் சுற்றி வளைத்தபோது, முகிலன் என்ற கரும்புலி மட்டும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து, மீண்டும் காட்டுக்குள் வந்து சேர்ந்து பிரபாகரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாராம். அதன் பிறகுதான் வான்படை தொடங்கப்பட்டது. நேவி பற்றிப் படிக்க, பல நாடுகளுக்குத் தனது வீரர்களை அனுப்பியது மாதிரியே. ஏரோநாட்டிக் படிக்கவும் சிலரைத் தேர்ந்தெடுத்தார் பிரபாகரன். தனத மூத்தமகன் சார்லஸ் ஆண்டனியையம் அதற்கே அனுப்பி வைத்தார். இந்த வான்படைத் தாக்குதல்கள் கொரிய பாணியைப் பின்பற்றுகின்றன. அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து அதி உணர் ராணுவ உத்திகளைப் பயன்படுத்தியபோது, வட கொரியா சிறு விமானங்களை வைத்து அமெரிக்காவை அச்சுறுத்தியது. அதைத்தான் புலிகள் செய்து கொண்டு இருப்பதாகப் போர் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

முல்லைத்தீவு – ஒரு காலத்தில் ராணுவம் தனது தளமாக வைத்திருந்த இடம். இப்பொது புலிகளின் தளமாக இருக்கும் இடம். இது யாருக்குத் தொல்லைத் தீவு என்பது போகப் போகத் தெரியும்!

- ப.திருமாவேலன்

நன்றி:: ஆனந்த விகடன், 4.3.09


2 கருத்துகள்:

newspaanai சொன்னது…

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

பெயரில்லா சொன்னது…

So.. nobody is interested to resolve the issue permanently...just wanted to keep the issue alive and get some business out of it.. vikatan sales is good and profit will moves in upward direction. Your blog hit will also goes up.. But think about Tamil People in Sri Lanka.. their numbers will go down everyday.. Advise / Compel both side to sit and talk to resolve the issue.. and not encouraging this sort of non-sense..