புதன், 4 மார்ச், 2009

விஷவாயுக்கசிவு விபத்து அமெரிக்காவில் நடக்காது

விஷவாயுக்கசிவு விபத்து அமெரிக்காவில் நடக்காது

வாஷிங்டன், மார்ச் 3: இந்தியாவின் போபால் நகரில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்து, அதே யூனியன் கார்பைடு ஆலை அமெரிக்காவில் இருந்திருந்தால் நடந்திருக்காது என்று அந் நாட்டு தொழிற்சங்கத் தலைவர் மைக்கேல் ரைட் மனம் வெதும்பிக் கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் சாட்சியம் அளித்தபோது அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

"1984 டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்துக்குப் பிறகு அந்த ஊரைப் பார்க்கச் சென்ற சர்வதேசக் குழுவில் நானும் ஒருவன். என்னுடன் இன்னொரு அமெரிக்கரும் வந்திருந்தார்.

அங்கே நான் கண்ட காட்சிகள் என் நினைவில் அழியாத சோக சித்திரங்களாகப் பதிவாகிவிட்டன. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அனேக இரவுகள் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

மகன், மகளை இழந்து துடிக்கும் பெற்றோர்களின் முகங்களும் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் முகங்களும் கனவுபோல வந்து என்னை வதைக்கின்றன.


அந்த ஆலையில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும், விஷ வாயுவைத் தயாரித்து அதைத் தொட்டியில் சேமித்து வைத்திருந்த விதத்தையும் பார்த்தபோது இந்த ஆலை அமெரிக்காவில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்குமா என்ற கேள்வியே என் மனதுக்குள் ரீங்காரமிட்டது. இந்தியாவில் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மக்களுடைய உயிரை கிள்ளுக்கீரையாக மதிப்பதாலும், லஞ்சம் வாங்கிக்கொண்டு எதையும் அனுமதிக்கும் கல் நெஞ்சர்களாக இருப்பதாலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர் பலிவாங்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய மறுவாழ்வுக்கு இன்னமும்கூட வழி செய்யாமல் இருப்பது கண்டு மனம் வேதனையால் துடிக்கிறது.

உயிரை நிச்சயம் குடிக்கும் என்று தெரிந்தும் ஒரு நச்சு வாயுவை ஒரு ஆலை தயாரிப்பானேன், அந்த ஆலைக்கு ஊருக்கு நடுவில் இடம் தருவானேன், ஒரு பெரிய நகரத்தையே நாசப்படுத்தும் அளவுக்கு விஷ வாயுவைத் தொட்டியில் சேமித்து வைப்பானேன் என்று பல கேள்விகள் என்னில் எழுந்தன.

நம் நாட்டில் உள்ள சட்டங்களும் அதை நாம் கண்டிப்புடன் அமல் செய்யும் முறையும் இருப்பதால் இந்த அளவுக்கு தான்தோன்றித்தனமான ஆலை இங்கு செயல்படுவது சாத்தியம் அல்ல. அப்படியே செயல்பட்டிருந்தாலும் அதன் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் இந் நேரம் தூக்கில் தொங்கியிருப்பார்கள், அல்லது இன்னமும் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

நம்நாட்டு ஆலை பாதுகாப்பு சட்டங்கள் மிகக் கடுமையானவை என்று சில வேளைகளில் தோன்றினாலும் அப்படி இருப்பதால்தான் இங்கு ஒரு உயிர்ப்பலியும் நடக்காமல் இருக்கிறது என்று புரிகிறது. பாவம் இந்தியர்கள். அவர்களுக்கும் சட்டம், விதிகள் இருந்தாலும் அதை அமல் செய்வதில் அந்த நாட்டு அரசு அதிகாரிகளும் அதை மேற்பார்வையிட வேண்டிய ஆட்சியாளர்களும் அலட்சியமாக இருப்பதால் அங்கு உயிருக்கு மதிப்பே கிடையாது' என்று பேட்டி அளித்திருக்கிறார் மைக்கேல் ரைட்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20090303130701&Title=International+News&lTitle=NoY%FARNf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/4/2009&dName=No+Title&Dist=

1 கருத்து:

பிரபு ராஜதுரை சொன்னது…

நன்றி!

பல வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய கருத்துக்கு இந்த செய்தி வலு சேர்க்கிறது

"அந்த சோதனை நடந்திருந்தால் யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்சாலைக்கும் இந்திய தொழிற்சாலைக்குமான பாதுகாப்பு நெறிமுறைகளின் (safety standards) வித்தியாசம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும். இந்திய தொழிற்சாலையில் குறைவான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளப் பட்டதாக (அதில் சந்தேகமும் இல்லை) ஆதாரம் கிடைத்தால் யூனியன் கார்பைடுவை அந்த ஆண்டவனே காப்பாற்றியிருக்க முடியாது"
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_31.html