புதன், 4 மார்ச், 2009

திசை மாறும் இலங்கைத் தமிழர் பிரச்னை

திசை மாறும் இலங்கைத் தமிழர் பிரச்னை

- அர்ஜுன் சம்பத்

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இலங்கை வேறு, இந்தியா வேறு என்று பூகோள ரீதியாகக் கருதப்படவில்லை. கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையில் இருப்பவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தில் இருப்பவர்கள் இலங்கைக்குச் சென்றுவருவதும் தொன்மைக் காலம்தொட்டு இயல்பாக இருந்து வந்தது.

சின்னாளபட்டியில் இருந்து சேலை வியாபாரம் செய்பவர்கள் கொழும்பு தெருக்களிலும், யாழ்ப்பாணத்திலும் வீதி வீதியாகச் சென்று சேலை வியாபாரம் செய்து திரும்புவார்கள். தற்போது சேலை வியாபாரத்துக்குச் சென்ற 300க்கும் மேற்பட்ட தமிழர்களைக் காணவில்லை.

ராமநாதபுரத்தில் இருந்து ஏராளமானோர் வியாபார நிமித்தமாக, கொடுக்கல்வாங்கல் தொடர்பாக தினசரி சென்று வந்த காலம் உண்டு. இலங்கை மீனவர்கள் அது தமிழர்களாக இருப்பினும், சிங்களவர்களாக இருப்பினும் இந்திய கடல் எல்லைக்குள் வருவதும், தமிழக மீனவர்கள் சிங்கள கடல் எல்லைக்குள் செல்வதும் வாடிக்கையான ஒன்றாக இருந்தது.

பன்னெடுங்காலம் தொட்டு ஆன்மிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இந்தியாவும்இலங்கையும் ஒன்றுபட்டுத்தான் இருந்தன. திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவாலயங்களை வைப்புத்தலங்களாக வைத்துப் பாடியுள்ளார். இலங்கையில் இருப்பவர்கள் இங்கு அறுபடை வீடுகளுக்கும், சிவாலயங்களுக்கும் இயல்பாக வந்து சென்று கொண்டிருந்தார்கள். இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பலர் தமிழகத்தில் வந்து சைவ சமயம் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் பல ஆராய்ச்சிகள் செய்து ஏராளமான சேவைகள் சைவத்திற்கும், தமிழுக்கும் செய்துள்ளனர் என்பது வரலாறு.

சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியாவில் கூடுகின்ற காங்கிரஸ் கமிட்டிக்கு இலங்கையில் இருந்துகூட பிரதிநிதிகள் வந்து சென்றுள்ளனர். 1947ல் நாம் சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் உள்ள பல்வேறு சமஸ்தானங்களை சர்தார் படேல் ஒன்றுபடுத்தினார். ஹைதராபாத், ஜுனாகட் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தபோது அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணிய வைத்து இந்தியாவுடன் இணைத்தார். நேரு போன்றவர்கள் காஷ்மீர் ராஜாவுடன் பேச்சு நடத்தி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார்கள். அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்தியத் தலைவர்கள் இலங்கையையும் அதே வகையில் இந்தியாவுடன் இணைக்கத் தவறிவிட்டனர். பூகோள ரீதியாக இந்தியாவோடு பல வகையில் பிரிக்க முடியாத உறவு கொண்டுள்ள இலங்கை, 1947ல் நாம் செய்த தவறின் காரணமாக உலக அரங்கில் ஒரு தனிநாடாக உருவாகியது. இதுவே இலங்கைத் தமிழர் நலனுக்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாகும்.

ஜனத்தொகை அடிப்படையில் தமிழர்களின் (இந்துக்கள்) எண்ணிக்கை குறைவாகவும், சிங்களவர்கள் (பௌத்தர்கள்) எண்ணிக்கை அதிகமாகவும் இருந்த காரணத்தால் தங்களின் அரசாங்க மதமாக பௌத்த மதத்தை அறிவித்துக் கொண்டனர். இதையடுத்து இலங்கை ஒரு பௌத்த நாடு என்று உலக அரங்கில் செயல்படத் துவங்கியது. இலங்கையில் உள்ள சிங்களவர்கள் அவர்கள் பின்பற்றுகின்ற பௌத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் தங்களது அரசியல் சாசனத்தை அமைத்துக் கொண்டனர்.

சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்ட ரீதியில் சிங்கள பௌத்தர்களுக்கே ஆட்சி அதிகாரத்திலும், அரசு பதவிகளிலும் மிக முன்னுரிமை கொடுத்தனர். தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். இதன் காரணமாக தமிழர்கள் அற வழியில் ஜனநாயக முறையில் தங்களது போராட்டங்களை நடத்தத் துவங்கினர். சிங்கள அரசு மேலும் தீவிரமாகி மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமையை ரத்து செய்ததோடு, அதிபர், பிரதமர், ராணுவத் தளபதி போன்ற உயர் பதவிகளில் தமிழர்கள் அமருவதற்கு உரிய உரிமைகளைப் பறித்தது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் தமிழர்கள் பகுதியில் சிங்களவர்களை குடியமர்த்தவும் துவங்கியது. தமிழர்களின் நிலப்பரப்பு சுருங்கத் துவங்கியது.

1961ல் இந்தியாவின் மீது சீனா படையெடுத்து இந்தியாவை ஆக்கிரமித்தது. சீனப் போரின்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. காரணம், சீனாவும் ஒரு பௌத்த நாடு, நாங்களும் ஒரு பௌத்த நாடு என்று இலங்கை கூறியது.

இலங்கையைச் சமாதானப்படுத்துவதற்காக நேரு, அப்போதைய இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டார நாயகவுடன் பேச்சு நடத்தினார். மேற்படி, பேச்சு காரணமாக இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஓட்டுரிமை பறிபோனது. இலங்கையை "தாஜா' செய்வதற்காக இந்திய நலன் கருதி நேரு மேற்கண்ட தவறான முடிவை எடுத்தார். அதுசமயம், தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை இந்திய கண்ணோட்டத்துடன் பார்க்காமல், தங்கள் கட்சிக் கொள்கையின் அடிப்படையில் ஆரியதிராவிட இனவாதப் பிரச்னையாகவும், வடக்குதெற்கு பிரச்னையாகவும் குறிப்பாக தங்களது தனித் திராவிட நாடு கொள்கையின் அடிப்படையிலான பிரச்னையாகவும், காங்கிரஸ் எதிர்ப்பாகவும், நேரு எதிர்ப்பாகவும் கையாண்டார்கள்.

அதன் பிறகு 1968ல் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இந்தியாபாகிஸ்தான் யுத்தத்தின்போது மீண்டும் இலங்கை சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இலங்கையை "தாஜா' செய்வதற்காக, சாஸ்திரிசிரிமாவோ ஒப்பந்தம் ஏற்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தின் காரணமாக 5 லட்சம் மலையகத் தமிழர்கள் இலங்கை மண்ணில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர்.

அதன் பிறகு, 1972ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மீண்டும் இந்தியாபாகிஸ்தான் யுத்தம் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் விமானம் இலங்கையில் உள்ள அனுராதபுரம் விமான தளத்தில் இறங்குவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுத்தது. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இலங்கை அரசு மேற்கொண்டது.

அதுசமயம் இலங்கைத் தமிழர்கள் அனுராதபுரம் விமான தளத்தின் ஓடுபாதையில் அமர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று மறியல் செய்தனர். அதன் பிறகு இந்திரா காந்தி இலங்கை அரசாங்கத்தோடு பேச்சு நடத்தி கச்சத் தீவு மீதான இந்திய அரசின் உரிமையினை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தார். அப்போது தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலோடுதான் இந்திரா காந்தியால் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

அதன் பிறகு ராஜீவ் காந்தி இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் சிங்களவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஒப்பந்தத்தின்படி நமது அமைதிப்படை அங்கு சென்றது. ராஜீவ்காந்தியும் சென்றார். அப்போது சிங்கள ராணுவ வீரரால் ராஜீவ்காந்தி தாக்கப்பட்டார். ராஜீவ்ஜயவர்த்தனே ஒப்பந்தத்தை மிகவும் ராஜதந்திரமாக ஜயவர்த்தனே கையாண்டு புலிகளையும் இந்திய ராணுவத்தையும் மோதவிட்டார். ஜயவர்த்தனேயின் சதிவலையில் மாட்டிக் கொண்ட ராஜீவ்காந்தி, அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொண்டதோடு புலிகளின் விரோதத்தையும் தேடிக் கொண்டார். இதன் காரணமாக ராஜீவ்காந்தி தன்னுடைய உயிரை தமிழ் மண்ணில் இழந்தார். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் மீதிருந்த அனுதாபம் மாறி வெறுப்புத் தோன்றத் துவங்கியது.

ஒவ்வொரு முறையும் இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு பேச்சு நடத்தும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கைத் தமிழர் நலனையும், இந்திய நலனையும் விட்டுக்கொடுத்து சிங்கள ஆதிக்கம் பெருக வழிவகை செய்வதாகத்தான் இன்று வரை இருந்து வருகிறது.

இந்தியாவுக்கு தீங்கு நேருகின்ற போதெல்லாம் இலங்கைத் தமிழர்கள் இந்திய அரசையே ஆதரித்து வந்துள்ளனர். சிங்களவர்கள் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை செயலர் பதவிக்கு போட்டி வந்தபோது, இந்திய அரசு சசி தரூர் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. இந்திய அரசாங்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே, இலங்கை அரசு போட்டி வேட்பாளரை நிறுத்தியது. இதன் காரணமாகவே சசி தரூரின் வெற்றி வாய்ப்பு பாதித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

செஞ்சோலை படுகொலைக்குப் பிறகு தமிழகத்திலும், இந்தியாவிலும். உலகெங்கிலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் அனுதாப உணர்வு பரவலாக உருவானபோது சீமான் மற்றும் அமீரின் இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் பிராமண விரோதப் பேச்சுகளும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீங்கு செய்வதாகவே அமைந்துள்ளது.

வழக்கறிஞர்களின் போராட்டத்தின்போது நீதிமன்றத்துக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமி மீது நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதிகளின் முன்னிலையிலேயே பிராமண விரோத, இந்திய விரோத கோஷங்களை எழுப்பி வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ளனர் வழக்கறிஞர்கள். ஒரு சிலரின் இந்த அராஜக நடவடிக்கையால் ஈழத் தமிழருக்கான போராட்டம் மேலும் வலுவிழந்து சட்டத்துறைக்கும் காவல் துறைக்குமான பிரச்னையாக திசை மாறியுள்ளது.

திருமாவளவன் நடத்திய உண்ணாவிரதத்தின்போது தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கொளுத்தப்பட்டன. காங்கிரஸ் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. சோனியா காந்தி உருவப்படம் கொளுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்னை காங்கிரஸ்விடுதலைச் சிறுத்தைகள் மோதலாக திசை மாறியது. இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பயன்?.

வைகோ போன்றவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைப் பற்றி பேசும்போது தங்களது ராமாயண எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தி இலங்கைப் பிரச்னையை ஆரியதிராவிட இனவாத பிரச்னையாக திசை திருப்புகின்றனர். இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது?

காங்கிரஸைப் பொருத்தவரையில் சோனியா காந்திக்கு தனது கணவர் ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை பழிவாங்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் மட்டுமே மேலோங்கி உள்ளது. இது வரை காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கண்கூடான உண்மையாகும்.

இலங்கையில் இந்தியாவின் எதிரி நாடுகளான சீன அரசாங்கத்தின் கை ஓங்குவதும், பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதிக்கம் ஓங்குவதும், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். இந்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் இலங்கையில் அமைதி காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது இங்குள்ள 8 கோடி தமிழர்களின் பிரச்னை மட்டுமல்ல. இது உலகெங்கிலும் உள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட இந்துக்களின் பிரச்னையாகும். இலங்கையில் இந்து மதம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. 1,400க்கும் மேற்பட்ட கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சைவ சமயம் தொடர்பானதும், தமிழ் வரலாறு தொடர்பானதுமான விலைமதிப்பற்ற ஓலைச் சுவடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர்கள் இந்துக்களாக வாழ்வதுதான் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் ஜயவர்த்தனே, இலங்கைப் பிரச்னை தீர வேண்டும் என்றால் இங்குள்ள தமிழர்கள் அனைவரும் பௌத்த மதத்தை தழுவ வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளதை இங்கே நினைவுகூர வேண்டும்.

எட்டுத் திக்கிலும் நமக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் இந்தியாவை நேசிக்கும், இந்தியாவிற்கு என்றும் ஆதரவாக இருக்கும் இந்திய வம்சாவளியினரான இலங்கைத் தமிழருக்கென்று ஒரு தனி ஈழம் உருவானால் அது ஆன்மிக அடிப்படையிலும், தேசிய அடிப்படையிலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு வலு சேர்ப்பதாகவே அமையும்.

நன்றி: தினமணி 04.03.2009

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DN020090303104812&Title=Editorial+Articles&lTitle=%A3%5Cl%D7d+Lh%D3%FBWLs&Topic=0&ndate=3/4/2009&dName=No+Title&Dist=

கருத்துகள் இல்லை: