இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் அழகான தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டே தந்திருக்கிறார் பிரபாகரன்.
இவை மட்டும் அன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தன.
இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர். பிரபாகரன் அவற்றைக் கொண்டு எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.
வெள்ளமுள்ளிவாய்க்காலில் 3 பெரிய பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் ஏராளமான ஆவணங்களை விடுதலைப் புலிகள் நிரப்பி மூடி வைத்திருந்தனர். அவற்றையும் மண்ணில் அவர்கள் புதைத்திருந்த ஆயுதங்களையும் இதர தளவாடங்களையும் இலங்கை ராணுவமும் போலீஸýம் இப்போது தோண்டி வெளியே எடுத்துக் கொண்டிருக்கின்றன. பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவையும் அவற்றில் அடக்கம்.
வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழப்பகுதிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன. ஒரு நிலையான ராணுவத்துக்கு உரிய கட்டுக்கோப்புடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தனியொரு மனிதனாக அவர் நடத்தியிருப்பதை இலங்கை ராணுவமும் போலீஸ் அதிகாரிகளும் இதிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர். அவற்றையும் பூமியிலிருந்து தோண்டி எடுத்தனர் ராணுவத்தினர்.
அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அந்த ஆவணங்களில் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட ஒரு புலியின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=World&artid=91606&SectionID=131&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக