வெளியே வாருங்கள் தமிழர்களே!
ஈழம் எரிந்து கொண்டு இருக்கிறது. உணர்வுள்ள தமிழர்களின் மனங்களும்தான். டெல்லியில் வெளி விவகாரத்துறையும், உளவுத்துறையும் எழுதிய நாடகத்தை மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும் அரங்கேற்றுகிறார்கள். கலைஞரும் துணைப் பாத்திரமாக வேடமேற்று நடிக்கிறார்.
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றார் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்
என்ற திரைப்பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.
உணர்வுள்ள தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார். தமிழர்கள் சுரணை கெட்டவர்கள் என்ற தைரியம்தான் அவருக்கு. கிழக்குப் பாகிஸ்தானில் வங்காளிகள் நெருக்கடிக்கு ஆளானபோது இந்திய இராணுவம் அந்நாட்டில் புகுந்ததே, அப்போது பாகிஸ்தானின் இறையாண்மையை இவர்கள் மதித்தார்களா? அமைதிப்படை போவதற்கு முன்னர் இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீதே பறந்து உணவுப் பொட்டலங்களைப் போட்டதே அப்போது இலங்கையின் இறையாண்மை இவர்களுக்கு நினைவில்லையா?
ஈழத்தில் போராளிக் குழுக்களுக்கு இந்திய அரச இராணுவப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கியதும் நமக்கு மறந்தா போய்விட்டது? புலிகளைக் கோட்டைக்கே வரவழைத்து அரசு பணம் 10 கோடி ரூபாய் எம்.ஜி.ஆர். வழங்கினாரே மறந்தா போய்விட்டது? விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களை வளர்த்தெடுத்த பாவத்தில் இந்திய அரசுக்கு பங்கு உண்டா, இல்லையா?
இன்று உலகத்திலேயே நாங்கள் தான் ஓழுக்கவாதிகள் என்று பேசும் காங்கிரசுக்கும், நாங்கள்தான் தத்துவ ஞானிகள் என்று பேசும் போலி மார்க்சிஸ்டுகளுக்கும் நாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? காந்தியடிகளையும் அவரது சுதேசி கொள்கைகளையும் விற்றுவிட்டு வெளிநாட்டுக் கம்பெனிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் இவர்களுக்குத் தேசபக்திப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவுக்கு அடகு வைத்த பாவிகள்தானே இவர்கள். இன்று இனவெறி சிங்கள அரசுக்கு இராணுவ உதவியும், உளவு சொல்லும் வேலைகளையும் பொருளாதார உதவிகளையும் நாங்கள் செய்யவில்லை என்று காங்கிரசு அரசு சொல்ல முடியுமா?
இவர்களாவது அம்பலப்பட்டுப் போனார்கள். பொறுத்துக்கொள்ளலாம். CPM எனப்படும் போலி மார்க்சிஸ்டுகளும் ஈழச் சிக்கலில் இன்னும் பெரிய கபட நாடகம் ஆடுகிறார்கள் ஈழத்தமிழர்களின் “சுயநிர்ணய உரிமை” பற்றிப் பேசுகிறார்கள் இவர்கள் மூளைச்சலவைச் செய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கல்லூரி ஆசிரியர் சங்கம், ஆகயவையும் வங்கி ஊழியர் சங்கம், காப்பீட்டு ஊழியர் சங்கங்கள் ஆகியவையும், ஈழச்சிக்கல்களும் மனித அவலங்களும் உங்கோ ஒரு உலகத்தில் நடப்பதாக பாவனை காட்டுகிறார்கள். ஏனென்றால் இந்தக் கட்சி தொடக்கமுதலே தமிழ் விரோதக் கட்சி என்று தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. இந்தத் தொழிற்சங்கங்கள் தரும் சந்தா பணத்தில்தான் இவர்கள் கட்சி நடத்துகிறார்கள். எப்போதும் தமிழ் விரோத உயர்வினை வெளிக்காட்டும், இந்துமதவாதி சுப்பிரமணிய சாமிக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களது மார்க்சிய மதவாதம் இன்னும் ஆபத்தானது. இவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு கோசம் போலியானது. இலங்கையைக் கொள்ளையடிக்க இந்தியாவைப் போல அமெரிக்காவும் முயற்சி செய்வது இவர்களுக்குத் தெரியாதா? அல்லது டாட்டாவுக்கு சிங்கூரில் நடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடகத்தை இங்கும் நடத்துகிறார்களா?
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு விரோதமான நிலைப்பாடு எடுத்தார்கள். அதேபோல் மலையாளிகளுக்கு ஆதரவாக சேலம் ரயில்வே கோட்டம் உருவாகக் கூடாது என்று நிலைப்பாடு எடுத்தார்கள். ஏன்? ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக மண்டல் கமிஷன் விவகாரத்தில் பொருளாதார அளவுகோல் என்ற மாயமந்திரக் கோலைச் சுழற்றினார்கள்... சுருக்கமாகச் சொன்னால் பிராமணிய நலன்களுக்காகவும், மலையாளி, வங்காளி நலன்களுக்காகவுமே இவர்கள் கட்சி நடத்துகிறார்கள். இல்லையென்றால் கலைஞர் காலில் விழுந்து ஓராண்டிற்கு முன்னால் வாங்கிய M.P பதவியை T.K. ரங்கராஜ ஐயங்காருக்குத் தாரை வார்ப்பார்களா? கடல்சார் பல்கலைக் கழகத்தைத் தமிழ்நாட்டில் வைக்காது கல்கத்தாவில் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பார்களா? சுய நிர்ணய உரிமை குறித்துப் பேசும் இவர்கள் தேசிய இனப்பிரச்சனை குறித்து லெனின் கொண்டிருந்த கருத்துக்களை இவர்களை நம்பி ஏமாறும் இளைஞர்களுக்காவது கற்றுக் கொடுப்பார்களா? தேசிய இனப்பிரச்சனை காரணமாக சோவியத் யுனியன் உடைந்தது என்ற வரலாற்று உண்மையை இவர்கள் ரகசியமாக அல்லவோ பாதுகாக்கிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகம் ஈழத்திற்கு ஆதரவாக எழுந்து நிற்கும் வேளையில் பிறந்த குழந்தைகளும், பெண்களும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் ஈழ அவலம் இவர்கள் கண்களையும் உறுத்தாது, நெஞ்சையும் சுடாது. பாலஸ்தீனத்தில் இறந்த 800 பேருக்காக இவர்கள் சிற்றூரில் கூட ஆர்ப்பாட்டம் நடத்தி தொழிற்சங்கம் என்ற பெயரில் தாங்கள் வைத்திருக்கும் மந்தை ஆடுகளைத் திசை திருப்புகிறார்கள். காங்கிரசின் அரசியல் நாடகத்தைவிட இவர்கள் நடத்தும் தத்துவ நாடகம் ஆபத்தானது.
மானமுள்ள தமிழர்களுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள் இதுதான். CITU என்ற பெயரில் இவர்கள் நடத்தும் போலி தொழிற்சங்கங்களில் இருந்து வெளியே வாருங்கள். ஆரம்பப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கங்களில் மாட்டிக்கொண்டவர்களும் சுய சிந்தனையோடு அந்த மந்தைகளில் இருந்து தப்பி வாருங்கள். தொழிற்சங்க அரங்கிலும் இவர்களது பாட்டாளி வர்க்க முகமுடி ஜெயலலிதாவோடு வைத்ததன் மூலம் கிழிந்து போய்விட்டது. பகை முடிக்கும் பணி முடிப்போம் என்ற கடந்த தேர்தலில் வசனம் பேசியவர்கள் இவர்கள்தான். இன்று அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் துடிப்பவர்களும் இவர்கள்தான். இந்து மதவாதத்தைவிட இவர்களது மார்க்சிய மதவாதம் வஞ்சகமானது, மக்கள் விரோதமானது என்பதைப் புரிந்துகொண்டு இவர்களது தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து மானமுள்ள தமிழர்கள் விடுதலை பெறவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
25 ஆண்டுகால வரலாறு உடைய காங்கிரஸ் கட்சியைவிட்டுத் தமிழருவி மணியன் போன்றவர்கள் வெளியேறிவிட்டார்கள். தேர்தல் திருவிழாவிற்குக் கொடியேற்றம் நடைபெற்றுவிட்டது. அரசியல் கட்சிகள் “தொகுதி ஒதுக்கீட்டுச்” சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். ஈழத்தமிழர் அவலம் குறித்துக் கவலைப்பட அவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்திற்கு நேரம் கிடைக்காது. ஆனால் சுயமரியாதையுடன் சிந்திக்கிற தமிழர்கள் அப்படி இருந்துவிட முடியாது. வாக்குப்பிச்சை கேட்க வரும் இவர்களிடமிருந்து விலகுவோம். இவர்களது அமைப்புகளிலிருந்து வெளியேறுவோம்.
தமிழ் இளைஞர் மன்றம்
திருநெல்வேலி
தொடர்புக்கு 94434 86285, 94436 14556
எனக்கு வந்த துண்டுப் பிரசுரத்தை அப்படியே தட்டச்சு செய்து உள்ளீடு செய்துள்ளேன். விவரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவும்.
2 கருத்துகள்:
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களை வளர்த்தெடுத்த பாவத்தில் இந்திய அரசுக்கு பங்கு உண்டா, இல்லையா?
நிச்சயமாக பங்குண்டு. குடிமக்கள்ளாகிய நாமாவது இந்த மோசமான பாவத்தில் பங்கெடுக்காமல் இருப்போமே.
நான் இந்தியாவை வெறுக்கிறேன்
நான் இந்தியன் என்பதை விட தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன்
நான் இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்
அனைவர் மனதில் இதைப் பதியவைக்க முயற்சி மேற்கொள்வேன்
கருத்துரையிடுக